Tuesday, September 10, 2019

திருமந்திரம் - 1656


இன்று நமக்கு இதுவும் அவசியம் (இந்த திருமந்திரம்) ....

ஆன்மீகம் என்ற பெயரில் மொத்தமாய்  அய்யோக்கியர்கள்... 

=================================
ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டிடை
ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும்
மான நலம்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.


- (திருமந்திரம் - 1656)


=================================

கருத்து: தெளிவு இல்லாதவர்கள் பக்திமான்களைப் போல் வேடம் போட்டு, இந்நாட்டில் இழிவான செயல்களில் ஈடுபட்டு, பிச்சை எடுத்து வயிறு வளர்த்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களால், இப்பூமியின் பெருமைகளும், நலன்களும் கெடும், ஆகையால், அப்படிப்பட்ட ஈனச் செயல் புரியும் பொய் வேடதாரிகளை, வேடம் கலையும்படிச் செய்து, அவர்களின் உண்மை உருவத்தை உலகறியச் செய்வது, நாட்டிற்கு நலம் செய்யும். பொய் வேடதாரிகளைச் சொல்லும் திருமூலர், இந்தப் பாடலிலும் அவர்களை வன்மையாகக் கண்டிக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

பொய் வேடதாரிகளைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்லி, வேடதாரிகளின் வேடம் கலையும்படியாகச் செய்ய வேண்டும் என்கிறார் திருமூலர். அதாவது முதலில் நமக்குத் தெளிவு வேண்டும். நம்மிடம் தெளிவு இருந்தால்தான், போலி வேடதாரிகள் யார் என்ற உண்மையை உணர முடியும், அதை மக்களிடையே உணர்த்தவும் முடியும். வேடதாரிகள், ஏதோ வயிற்றுப் பாட்டிற்காக, வேடம் மட்டும் போடவில்லையாம். அதை வைத்து மக்களை ஏமாற்றி, தீங்குகள் செய்து சுக போகங்களில் திளைக்கிறார்களாம்.

அப்படிப்பட்டவர்களின் உண்மையை உணர்ந்து அவர்களின் உண்மை உருவை வெளிப்படுத்த வேண்டுமாம். இப்பாடலில், ‘நாட்டிடை,’ ‘புவி’ எனும் சொற்களைத் திருமூலர் அமைத்திருப்பதைப் பார்த்தால், அவருடைய உள்ளம் புரியும். நாடு என்பது சிறுபகுதி; புவி என்பது உலகம் முழுவதையும் குறிக்கும். போலி வேடதாரிகளால் நாட்டிற்கு மட்டுமல்ல; உலகிற்கே தீமை விளையும் எனக்கூறி எச்சரிக்கிறார் திருமூலர். உணர்ந்து, தெளிவு பெற்று செயல்பட வேண்டியது நமது பொறுப்பு.

நம் பிள்ளைகளுக்கு திருமந்திரம்  சொல்லி வளர்க்க வேண்டும்...


கடவுளை வணங்க / அடைய நடுவில் (சராசரி மனிதன்) எவன் தயவும் தேவை இல்லை என்று.... 




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.