Wednesday, February 26, 2025

சிவவாக்கியர் சித்தர்💜 💜


கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதை காள்
பூசையுன்ன தன்னிலே பூசை கொண்டது எவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே

ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில்
போதங்களானது எச்சில் பூதலங்கள் ஏழும் எச்சில்
மாதிருந்த விந்து எச்சில் மதியும் எச்சில் ஒலியும் எச்சில்
ஏதில் எச்சில் இல்லதில்லை இல்லை இல்லை இல்லையே

தூமை தூமை என்றுளே துவண்டு அலையும் ஏழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோனது எவ்விடம்
ஆமைபோல மூழ்கிவந்து அநேக வேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டிருண்டு சொற்குருக்கள் ஆனதே

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.