Saturday, August 10, 2013

சதுரகிரி மலை தகவல் தொடர்.....

சித்தர் பெருமக்களின் அக மற்றும் புறத் தேடலுக்கான அனைத்து அம்சங்களையும் இயற்கை அன்னை வாரி வழங்கிதனால்தான் சதுரகிரி மலையானது சித்தர்களின் தலைமயகம் என பெயர் பெற்றது.  சித்த மருத்துவம் மற்றும் இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் முக்கியமான மூலகம் பாஷாணம் எனப் படும் பாடாணம். இவை உலோகத்தினை போன்ற கடினமான தன்மையையும், கொடிய விஷத்தின் தீவிரத்தையும் கொண்டிருக்கும் தின்மப் பொருள்.இது தொடர்பான் மேலதிக விவரம் வேண்டுவோர் எனது முந்தையபதிவுகளில் வாசித்தறியலாம்.இந்த பாஷாணம் இரண்டு பெரும் பிரிவுகளாக கூறப்பட்டிருக்கிறது.அவை பிறவிப் பாஷாணம் வைப்புப் பாஷாணம். இதில் பிறவிப் பாஷாணம் என்பது இயற்கையில் கிடைக்கும் மூலகம். பழநியில் குடி கொண்டிருக்கும் நவபாஷான மூலவரின் சிலையானது சதுரகிரி மலையில் செய்யப் பட்டு பழனிக்கு கொண்டு சென்றதாக ஒரு செவிவழிக் கதை உள்ளது. ஆனால் இதை நிறுவும் வகையில் தகவல்கள் ஏதும் சித்தர்களின் பாடல்களில் இல்லை.ஒரு வேளை சதுரகிரியில் இந்த சிலை செய்யப் பட்டிருந்தால் நிச்சயமாக இங்கு பாஷாணங்கள் கிடைத்திருக்க வேண்டுமல்லவா!. இந்த தகவலை உறுதி செய்திட தகவல்கள் ஏதும் கிடைக்கிறதா என போகர் மற்றும் அகத்தியரின் பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த அரிய தகவலை இன்று பகிர்ந்து கொள்கிறேன். ஆம், சதுரகிரி மலையில் பாஷாணம் இருக்கிறது, அதுவும் எங்கே இருக்கிறது என்பதை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.

"பெருமையாம் சதுரகிரி வளப்பஞ்சொல்வேன்
 நுட்பமுடன் புலஸ்தியனே புனிதவா
 பாலான தேசமெல்லாம் திரிந்துவந்தே
 பாலகனே சதுரகிரி வளப்பமெத்த
லேசான காட்டகத்தே திரிந்துகண்ட்டேன்
சங்கமுடன் சதுரகிரி கிழக்கேயப்பா
சட்டமுடன் பாடாணக் காடுகண்டேன்
நலம்பெரிய பூமியெல்லாம் சுண்ணக்காடு
பட்டயம்போல் சுனையுண்டு தோப்புமுண்டு
பாலகனே கண்டேன் யாவுங்கண்டேனே"

இந்த தேசமெல்லாம் சுற்றிவந்த நான், வளங்கள் நிறைந்த சதுரகிரியிலும் சுற்றினேன். சதுரகிரி மலையில் கிழக்குப் பகுதியில் எளிதில் நுழையக் கூடிய பகுதியில் பாஷாணக் காடு கண்டேன் என்கிறார்.இந்த காட்டின் நிலப் பகுதியானது சுண்ணம் அதிகமாக காணப்படும் என்கிறார். மேலும் அந்தக் காட்டின் மத்தியில் சுனையும் தோப்பும் இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து வரும் பாடல்களில் பாஷாணங்களின் வகைகளையும் அவற்றின் பயன் பாடுகளையும் விவரித்துச் செல்கிறார். ஆச்சர்யமான தகவல்தானே!, சதுரகிரி மலையின் கிழக்கே உள்ள காட்டில் சுண்ணம் நிறைந்த நிலப் பகுதியில் பாஷாணங்கள் நிறைந்திருக்கின்றனவாம்.ஆர்வமுள்ளோரும், ஆய்வாளர்களும் இந்த தகவலைக் கொண்டு மேலதிக ஆய்வுகளை செய்திடலாம்.


ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல். இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை. குருவருள் துனை நிற்க கவனக் குவிப்புடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகக் கடினமானதும், மிக உயரியதுமான இந்த முக்தி நிலையினை சதுரகிரி மலையில்  அடையும் வழியொன்றினை அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார்.

"கேளடா சதுரகிரியின் வளமைதன்னை
காண்பவர்க்கு கெதிமோட்சங் கிட்டுங்கிட்டுங்
ஆளடா சதுரகிரி என்கோணமாகும்
அருளான கோணமெல்லாம் குகைதானுண்டு
சூளடா கிரிமுடியில் குகைதானுண்டு
சொன்ன குகை ஒன்பதிலும் நவசித்தர்
தளடா சிறப்புடனே தவசுபண்ணி
தன்னருளால் பிர்மமய மானார்பாரே"

சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதாகவும், இந்த எட்டு மூலைகள் மற்றும் நடுவிலிருக்கும் சதுரகிரி உச்சி என ஒன்பது இடங்களில் குகைகள் இருப்பதாக கூறுகிறார். இந்த குகைகளில் நவ சித்தர்கள் சிறப்பாக தவம் செய்து அருள் பெற்று பிரம்ம மயமானார்களாம். இந்த ஒன்பது குகைகளையும் தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறியிருக்கிறார். த்ற்போது சதுரகிரி மலையானது சுமார் ஐநூறு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அக்காலத்தில் இந்த மலையின் பரப்பளவு இன்னமும் கூட அதிகமாய்  இருந்திருக்கலாம்.அடர்ந்த வனமான இந்த மலையில் கால்நடையாகவே எட்டு மூலைகளுக்கும் பயணித்து மொத்தமுள்ள ஒன்பது குகைகளையும் தரிசிப்பதில் உள்ள மேலான சிரமங்கள் ஒருவரை பக்குவமானவராய் ஆக்கி விடக்கூடும்.இத்தகைய பக்குவமானது ஒருவரை மேலான முக்தி நிலைக்கு உயர்த்தி விடலாமென கருதுகிறேன்.மேலும் இந்த பாடல்வழியே சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதும் புலனாகிறது.சதுரகிரி மலையில் இப்படி எத்தனையோ ஆச்சர்யங்கள் மறைந்தும் , நிறைந்துமிருக்கின்றன.

தொடரும்!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.