Thursday, November 12, 2015

கந்த சஷ்டி திருவிழா



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் 7 நாட்கள் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து விரதமிருந்து சூரசம்காரம் முடிந்த உடன் விரதத்தை முடிப்பார்கள். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நவம்பர் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடை பெறும். நவம்பர் 13ம் தேதியில் இருந்து 16ம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படும். நவம்பர் 17ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த் தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகளும் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்குமேல் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. மறுநாள் 18ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற ஆறுபடை வீட்டுக் கோயில்களில் கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் மிகச் சிறப்பாக நடக்கும். கந்த சஷ்டியன்று திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரக் காட்சியைக் காண பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடுவர். ஏழாம் நாள் காலை தெய்வானைத் திருமணம் என்ற விழாவும் திருத்தணியில் வள்ளி கல்யாணமும் நடக்கும். முருக பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி என்று பல காவடிகள் சுமந்து முருகனைத் தரிசிக்க வருவது கண்கொள்ளாக் காட்சி. 

தம் குறை தீர்க்க முருகனை வேண்டி நின்ற பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு,காவடியும் சுமந்து வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். இலங்கையில் கதிர்காமம் என்ற ஊரில் கதிர்வேல் முருகன் காட்சி தரும் திருக்கோயிலிலும் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விரதங்கள் இருந்து முருகனின் திருவடிகளில் சரணம் அடைந்த பக்தர்களுக்கு இங்கே முருகப் பெருமான் காட்சியளிக்கிறார் என்பது பரவலான நம்பிக்கை.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.