இன்றிலிருந்து சரியாக இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு படித்த புத்தகம் எம்.எஸ்.உதயமூர்த்தி ஐயாவின் சிந்தனை தொழில் செல்வம்.
எவருக்கு வாழ்வில் உழைப்பால் உயரவேண்டும் என எண்ணமிருக்கிறதோ,ஒழுக்கமான மனிதனாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறதோ அவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
அந்த நூலின் வழியே நான் கற்றது கடல்.அதில் ஒரு துளியாக அவர் குறிப்பிட்டுள்ள வரிகளில் தம்பி இந்த உலகில் எதுவும் இலவசமாக கிடைக்காது.ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு.அது வணிகமாக இருப்பினும் உறவாக இருப்பினும் கொடுக்கும் பொருளுக்கு ஈடாக ,செயலுக்கு ஈடாக ,அன்புக்கு ஈடாக நாம் பதிலுக்கு செலுத்தி ஆகவேண்டும்.அப்படி இல்லாத போது அந்த தராசு தட்டு ஒரு பக்கம் மட்டும் தாழும் போது அந்த செயல் கசந்து விடுகிறது.
அரசாங்கம் இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்பட்டு விட்டது.எதுவாக இருப்பினும் அரசாங்கம் செய்ய வேண்டும் நம்க்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற மனோ நிலை வந்துவிட்டது.இதை விட கேடான ஒரு நிலை ஒரு நாட்டிற்கு தேவையில்லை.இது ஒரு பெரும் நோய் மனோபாவம் என சொல்லியிருப்பார்.அதை கண்ணால் பார்க்கும் காலத்தில் இருக்கிறோம்.
தனிமனிதனால் ஈட்டக்கூடியவற்றை மின்விசிறி,தொலைக்காட்சிப்பெட்டி ,கணினி அடுப்பு ,வேட்டி சட்டை,ஜட்டி என்பவற்றையெல்லம் அரசாங்கம் இலவசமாக தரவேண்டும் என ஆசைப்படும் போது , அரசு செய்ய வேண்டியவற்றை எல்லாம் விலை கொடுத்து பெற வேண்டிய இழி நிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.
தரமான குடி நீர் , கல்விச்சாலை ,நல்ல மருத்துவமனை,சாலை வசதி என அரசாங்கம் மட்டுமே செய்யக்கூடிய செயல்களை {அதற்கான செயல்களுக்காக உருவாக்கப்பட்டதே அந்த அமைப்பு }இன்று விழிபிதுங்க கல்விக்கொள்ளையர்களிடம் விலை கொடுத்து பெற்றுக்கொண்டிருக்கிறோம்.அப்படியாகினும் கொடுக்கும் பணத்துக்கு ஈடாக சரியான பொருளோ ,சேவையோ பெற முடியும் நிலை உண்டா இந்த தேசத்தில் ? கேள்வி எழுப்பத்தான் முடியுமா ?
கொடுக்கும் பணத்துக்கு ஈடான சேவை தரம் உண்டா எங்காவது ? இயலாதவர்களிடம் , வலிவற்றவர்களிடம் ,பெண்களிடம் வலிவை காண்பிக்கும் எவராவது இது குறித்தெல்லாம் எங்காவது கேள்வி எழுப்பியதுண்டா ? பெட்டை வீரத்தை ஒரு சேவைக்குறைபாடுள்ள அரசாங்க அலுவலகத்தில் ஒரு சாதிச்சான்றிதழுக்கு பதினைந்து நாட்களுக்கு அலைய விடுபவர்களிடம் காண்பிக்க முடியுமா ? அங்கு இது செல்லுபடியாகாது . உள்ளங்காலை நக்கியாவது காரியம் ஆகவேண்டும் .காரியம் பெரிதா ? வீரியம் பெரிதா ?
மாவுப்பாக்கெட்டை வீசி எறிந்து விட்டு ஒருவர் பட்ட பாடு இங்கு சந்தி சிரித்தது. பிரபலமாக ஆகிவிட்டால் கோபம் வரக்கூடாதா ?.உணர்வுகள் இருக்கக்கூடாதா ?.அனுமதி கேட்காமல் படம் எடுப்பதை தடுக்கக்கூடாதா ?.
ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்குகிறோம். அந்த பொருளை விற்பவர் அதற்கான தரத்தை அந்த பொருளில் தரவேண்டும். நான் கொடுப்பதை தான் நீ வாங்கிக்கொள்ளவேண்டும் என்பது அக்கிரமம் இல்லையா ? பிச்சையா கேட்கிறோம். எதை வேண்டுமானாலும் போட ? பணம் கொடுத்து பெறும் ஒரு விஷயத்தை அதற்கான நேர்மையோடு செய்ய இன்று ஒருவரும் தயாரில்லை.
கடலூரில் ஒரு உண்வகம்.இரண்டு இட்லி கேட்டேன்.இட்லியோடு ஒரு வடையும் கொண்டு வந்து வைத்தார்.எல்லொருக்கும் இது போல் தான் செய்தார்கள்.ஐயா நான் இட்லி மட்டும் தான் கேட்டேன் .வடை வேண்டாம் என்றேன்.தட்டில் வைத்தாகி விட்டது என்றார்.நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யக்கூடாது .எனக்கு ஒன்னும் நீங்கள் இலவசமாக தரவில்லை என வாக்குவாதம் செய்த பின் எடுத்தார். நான் கொண்டு வந்த தட்டில் கையே வைக்கவில்லை . அதனால் தப்பித்தேன்.
விழுப்புர மாவட்ட வரலாற்று பயணத்தில் கிளியர்ட்ரிப் இணையதளத்தின் மூலமாக அறை பதிவு செய்திருந்தோம்.சென்னை சில்க்ஸ் அருகில் உள்ள விடுதி அது.பதிவு நாள் அன்று கேட்ட போது கிடையாது என்று சொல்லிவிட்டனர்.பதிவு செய்தவர்களிடம் கேளுங்கள்.நாங்கள் அறைகளை திருமணத்திற்கு வாடகைக்கு மொத்தமாக பேசி விட்டோம் என்றனர்.ஐயா ஐந்து அறைகளுக்கு பணம் செலுத்தியிருக்கிறோம் என்று ரசீதை காட்டினோம்.அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க கட்டினவங்ககிட்ட கேளுங்க என்று சென்று விட்டார்.இணையதளத்தில் பலமுறை தகவல் அளித்தும் இது வரை பணம் நரி தின்ற கோழிதான்.
சேல்த்திலிருந்து விழுப்புரம் வரை பயணிக்க 205 ரூபாய் சுங்ககட்டணம் செலுத்த வேண்டும் . விரைவாக பயணிக்கவும்,தரமான சாலைக்காகவும் இந்த கட்டணம் . இந்த சாலையில் உயிரோடு பயணித்து திரும்பி வருவது ஒரு சாகசம். நான் கு வழிச்சாலை திடீரென இருவழிச்சாலையாக மாறும் எதிரில் வாகனம் வராது என விரைந்து செல்லும் போது திடீரென இருவழியாக மாறி எதிரில் வாகனம் வந்து குடும்பம் குடும்பமாக பரலோகம் போன கதை நிறைய உண்டு.
எண்பது கிலோமீட்ட்ர் வேகத்தில் செல்லும் போது ஒரு சிறிய பள்ளம் போதும் உங்கள் ஸ்டியரிங்கை திரும்ப வைத்து எதன் மீதாவது மோதி நீங்கள் சொர்க்கத்துக்கோ நரகத்துகோ அவரவர் பலாபலனுக்கு ஏற்ப சென்று சேர . . அதில் தப்பிப்பிழைத்து நீங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தும் இடத்தில் கேள்வி எழுப்பக்கூடாது. நல்ல சாலைக்கு எனத்தானே பணம் பெறுகிறீர்கள் ? என்ன இப்படி குண்டும் குழியுமா வச்சிருக்கீங்களே நியாயமா?
சார் காண்ராக்டர் சரியில்ல, ரோடு போட்ட ரோலர் சரியில்ல .ரோலர ஒட்டுன ட்ரைவர் சரியில்ல.அதுக்கு நான் என்னங்க சார் பண்றது ?
காசு வாங்கறது நீங்க உங்ககிட்டதான் கேட்கமுடியும் ? சார் நான் இங்க வேலை தான் பாக்கறேன்.என் கிட்ட கத்தி எந்த பிரயோஜனமில்லை.
ஒரு விபத்தை தவிர்த்து கடந்து வந்து கத்திக்கொண்டிருப்பனை எந்த வித சலனமும் அற்று கேட்ட தொகையை நீட்டி விட்டு கடந்து சென்று கொண்டிருந்தன கார்கள்.
தரமற்ற சாலை , வாகனம் , சேவை இவை ஏற்படுத்தும் உயிர்பலி எல்லாம் நமக்கு நான்கு வரி செய்தியோ ,தொலைக்காட்சியின் ஒரு நொடி காட்சியோ ?
கொள்ளையடிப்பவனை,தரமற்ற சேவையை,பொருளை விற்பவனை நோக்கி கேள்வி எழுப்புவர்களை ,தனி மனித உரிமையை கேலிக்குரியதாக்கி கொண்டாடும் சமூகத்தில் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் எலி கடிப்பதும்,கர்ப்பிணிக்கு தவறான இரத்தம் ஏற்றுவதும் , நோயாளிகள் உயிர் பிழைக்க தஞ்சமடைந்த மருத்துவனையிலேயே சவமாவதும் சாதாரணமான நிகழ்வே . .
எல்லாவற்றையும் சகித்து, எதிர் கேள்விகளற்று வெந்ததை தின்று ,விதி வந்தால் சாவோம் என்று வாழ துணிந்தால் அவர்களுக்கு இந்த தேசம் சொர்க்கம்.
வரலாற்றின் வழி நிற்கும் கலையும் , சிலையும் , ஓவியமும் , கட்டிடமும் உருவாக்கியர்களின் நேர்மையை , திறனை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் சொல்லிக்கொண்டிருக்க சமகால சமூகத்தில் அவலத்தை எங்கு சொல்வது ?