Saturday, January 25, 2020

பொறுத்தது போதும் தமிழே கோபுரம் ஏறு; குடத்து நீராடு. வையம் அளந்த தமிழே! வான்தொடு. சிவனுக்கே நீ பிடித்துப் போனபிறகு எவனுக்கு நீ பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன?

தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஆயிரம் ஆண்டுகளாய் கலையாது நிற்கும் ஒரு கல் கனவு.


















பதிவு: ஜனவரி 25,  2020 10:31 AM


ஞ்சைப் பெருவுடையார் கோவில் ஆயிரம் ஆண்டுகளாய் கலையாது நிற்கும் ஒரு கல் கனவு. தமிழர்களின் உன்னத கலையின் உயரம் அது. பிப்ரவரி 5-ம் நாள் அதன் திருக்குடமுழுக்கு நிகழப்போகிறது. அது தமிழிலேயே நிகழ்த்தப்பெற வேண்டும் என்னும் கொள்கைக்குரல் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்தக் குரலில் தமிழ் அறம் இருப்பதால் என்னையும் நான் இணைத்துக்கொள்கிறேன்.
கடவுள் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால், மொழி என்பது மக்களின் உரிமை. இன்னொரு வகையில் மொழிதான் அறிவு; மொழிதான் புரிதல்; மொழிதான் ஓர் இனத்தின் அதிகாரம். எனவே கடவுள் என்ற கருத்தியலைத் தாண்டி, தாய்மொழி என்ற உரிமைக் களத்தில் தமிழர்கள் நிற்கிறார்கள். வழிபடு கடவுளுக்கும் வழிபடுகிறவர்களுக்கும் இடையில் புரியாத மொழியின் திரை ஒன்று சுவராய் எழுந்து நிற்பது எதை எதையோ தடுக்கிறது. ஒரு மொழி கடவுளுக்குப் புரிகிறதா இல்லையா என்பது கவலையன்று; மக்களுக்குப் புரிகிறதா என்பதே கலங்க வைக்கும் கவலை.

பெரிய கோவிலைக் கட்டுவித்தோன் தமிழ் மன்னன்; கட்டியவன் தமிழ்ச் சிற்பி; கல்சுமந்தோன் தமிழன்; அதில் நிறுவப்பட்ட ஆண்டவனும் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்புடையவன் என்று கருதப்படுகிறவன்; வழிபடும் மக்களோ தமிழ் மக்கள்; வழிபடு தலமோ ஒரு தமிழ்ப் பேரரசின் தலைநகரமான தஞ்சை. அதனால் கொண்டாட்ட மொழியாகவும் குடமுழுக்கு மொழியாகவும் தமிழ்தான் திகழவேண்டும் என்பதை அஃறிணை கூட முன்மொழியும்; வந்துபோகும் காற்றும் வழிமொழியும். ஆனால் ஆகமவிதிகளைக் காரணம் காட்டி, தமிழ் இரண்டாம் மொழியாய் இழிவுறுவதைத் தமிழ் உணர்வாளர்கள் தாங்கமாட்டார்கள்.

ஆகமம் என்பது வேறொன்றுமன்று. மதக் கோட்பாடு கோயிற் கட்டமைப்பு வழிபாடு மந்திரம் குறித்த வழிகாட்டு நூலாகும். வைணவ ஆகம நூல்களுக்கு ‘ஸம்ஹிதை’ என்று பெயர்; சைவ ஆகம நூல்களுக்கே ‘ஆகமம்’ என்று பெயர். ‘தொன்று தொட்ட அறிவு’ என்பதுதான் ஆகமத்தின் பொருள் என்று அறியப்பட்டிருக்கிறது.

‘காமிகம்’ முதலாக ‘வாதுளம்’ ஈறாக உள்ள 28 சிவ ஆகமங்களும் கட்டிட இலக்கணங்களையும், வழிபாட்டு முறைகளையும் சொல்லிப் போகின்றனவேயன்றி, சமஸ்கிருதத்தில்தான் குடமுழுக்கு நிகழ்த்தப்பெற வேண்டும் என்று எவ்விடத்திலும் எழுதிச் செல்லவில்லை. அப்படியாயின் குடமுழுக்கு மொழி தமிழ்மொழி என்று மட்டும் ஆகமவிதி எழுதப்பட்டிருக்கிறதா என்று அறிவார்ந்த கூட்டம் என்மீது அம்பு தொடுக்கலாம். ஆகமவிதி இருக்கிறதோ இல்லையோ தார்மீக விதியிருக்கிறது.

தொல் பழங்காலமாய் மண்ணும் மண் சார்ந்த பருப்பொருள்களுமே கடவுளோடு கலந்து வந்திருக்கின்றன. கொன்றை - கடம்பு - மகிழம் -எருக்கிளம் போன்ற மண் சார்ந்த மலர்களே கடவுள் மலர்கள்; செர்ரிப் பூக்களும், டேபடில்ஸ் மலர்களும் அல்ல.

காளை - கருடன் - மயில் போன்ற தமிழ் நிலங்களின் உயிர்களே கடவுளர் வாகனங்கள்; ஒட்டகங்களோ காண்டாமிருகங்களோ அல்ல.

வில்வம் - வேம்பு - ஆல் - அரசு என்ற தமிழ் மண்ணின் மரங்களே தலவிருட்சங்கள்; பைனோ சைப்ரஸோ அல்ல.

தமிழ்நாட்டு எல்லைக்குள் பிறந்து வளரும் மலர்களும், மரங்களும், உயிர்களுமே கடவுளர் பக்கத்தில் கருதத்தக்கவையெனில், தமிழ்மொழிதானே கடவுளே காதலிக்கும் மொழியாகத் திகழமுடியும்? அதைவிடுத்து, சிவபெருமான் ஒட்டகத்தில் ஊர்ந்து வருவதுபோல் வடமொழியில் அவருக்கு அர்ச்சனை புரிந்தால் அழகாகவா இருக்கும்? தமிழ்நாட்டு எல்லைக்குள் விளங்கும் கடவுளர்களுக்குத் தமிழ்மொழிதான் உவப்பானதும் உரித்தானதுமாகும்.

ஒன்றுமட்டும் உறுதி. வேத பண்டிதர்களுக்கோ வடமொழிக்கோ விரோதம் பாராட்ட யாரும் விரும்பவில்லை. வடமொழி கொலுவிருக்க வேண்டிய தளத்தில் கோலோச்சட்டும். தமிழ்நாட்டில் வழிபடுமொழியாகத் தமிழ் விளங்க வழிவிடுமொழியாக வடமொழி திகழ்வதையே வரவேற்கிறோம்.

ஆண்டாண்டு காலமாய் பழகிவிட்டது மாற்றவியலாது என்று சிலர் மறுதலிக்கலாம். மனிதகுல வரலாற்றில் எந்த விதியும் நிரந்தரமானதன்று. வளர்ச்சி மாற்றத்தைக் கொண்டு வருகிறது அல்லது மாற்றம் வளர்ச்சியில் முடிகிறது. ‘சத்தியமேவ ஜெயதே’ என்ற வடமொழி வாசகம் மாற்றப்பட முடியாது என்று இருந்திருந்தால் ‘வாய்மையே வெல்லும்’ என்ற மணிவாசகம் ஏது? ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்று வெள்ளைக்காரன் சொன்னதே வேதமாய்ப் போயிருந்தால் ‘தமிழ்நாடு’ என்ற தங்கச்சொல் ஏது? எனவே மாற்றம் என்பது நேரவே நேரும்; அது நாளைமுதல் நேரட்டுமே.

ஒருவேளை ஆகம விதி வடமொழியைத்தான் வற்புறுத்துகிறது என்று சொல்ல நேர்ந்தாலும் ஆகம விதி மீறப்பட்டதே இல்லையா என்ற வெடித்த கேள்வியை வீச வேண்டியவர்களாக இருக்கிறோம். எந்த ஆகம விதி கோவில் கோபுரத்தின் நெய் விளக்கிற்கு மாறாக மின்விளக்கு அமைக்கச் சம்மதித்ததோ அதே ஆகம விதியின்படியே வடமொழி இடத்தில் தமிழை இருத்தலாம்.

வழிபடு மொழிகளை வகைப்படுத்த வந்த சேக்கிழார் பெருமான், “தென்றமிழும் வடகலையும் தேசிகமும்” என்று மும்மொழிகளில் எம்மொழியினும் வழிபடலாம் என்று வழிவிடுகிறார்.

தமிழில் குடமுழுக்காடினால் நாட்டுக்குத் தீங்கு விளையும் என்று சொல்லாடி மல்லாடுகிறவர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். தீங்குறுத்துவதா தமிழ்? தீமையில் கட்டுண்டோரை மீட்கும் காப்புக் கருவியல்லவோ தமிழ்? கல்லோடு கட்டிக் கடலில் வீசியபோதும் கல்லைத் தெப்பமாக்கி அப்பரைக் கரை சேர்த்ததென்று நம்பப்படுவதன்றோ நற்றமிழ்?’ கற்றுணைப் பூட்டிக் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே’ என்று பாடப்பட்டதன்றோ பதிகத்தமிழ்?

பூட்டிக் கிடந்த திருமறைக்காட்டு ஆலயக் கதவுகளைத் தெறிக்கத் திறந்தது எந்தத் திறவுகோல்? நாயன்மார் பாடிய நறுந்தமிழ்த் திறவுகோல்.

கண்ணப்ப நாயனார் கதை தெரியாதா? ஆகமவிதிப்படி மலர்கள் கொண்டு வந்தார் சிவகோசரியார். ஆகமவிதி கடந்து மாமிசம் கொண்டு வந்தார் கண்ணப்பர். ஆகம நெறிகளைத் தாண்டி அன்புநெறி காட்டிய கண்ணப்பனுக்குத்தானே அருள் பாலித்தார் ஆண்டவன்? வழிபாடு என்பது ஆகமங்களுக்கு உட்பட்டும் இருக்கலாம் அதைக் கடந்தும் இருக்கலாம்.

திருமூலரை ஆண்டவன் ஏன் படைத்தான் என்பதைத் திருமூலரே சொல்கிறார்: ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’. ஒரு பெரும்புலவனையே தமிழ் செய்யப் படைத்தவன் தமிழைவிட்டுத் தள்ளி நிற்பானா? வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆகிய நாதன் நாமம் நமசிவாயத்தை ஓதத்தான் 50 ஓதுவார்களை மாமன்னன் ராசராசன் பெருவுடையார் கோவிலில் நியமித்தான் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளே காட்டுகின்றன.

மாமன்னன் ராசராசன் காலத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளாய் ஓதப்பட்ட தமிழ், பெருவுடையார் கோவிலின் அடிவாரத்தில் நிற்கிறதே தவிர கோபுரத்தில் ஏறமுடியவில்லை. பொறுத்தது போதும் தமிழே கோபுரம் ஏறு; குடத்து நீராடு. வையம் அளந்த தமிழே! வான்தொடு. சிவனுக்கே நீ பிடித்துப் போனபிறகு எவனுக்கு நீ பிடித்தால் என்ன பிடிக்காவிட்டால் என்ன?

சட்டப்படியும் நாங்கள் தமிழ் ஓத உரிமை பெற்றிருக்கிறோம். அவரவர் கடவுளை அவரவர் தாய்மொழியில் வணங்க அரசமைப்புச் சட்டம் உரிமை தந்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசின் ஆட்சிமொழியும், இந்து சமய அறநிலையத்துறையின் அலுவல் மொழியும் தமிழாகக் கோலோச்சும்போது தாய்மொழிக்கு வேறென்ன தடையிருக்க முடியும்? வடமொழியில் பாடினால்தான் வரம் தருவேன் என்று சிவனார் சொல்வாரா? ‘மம்மி’ என்று அழைத்தால்தான் தாய்ப்பால் தருவேன் என்று தலைதிருப்பிக்கொள்ளும் ஒரு தாய்க்கும், சமஸ்கிருதத்தில் ஓதினால்தான் அருள் பாலிப்பேன் என்று முகஞ்சுழிக்கும் கடவுளுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? கடவுளுக்கும் தமிழர்களுக்கும் மத்தியில் மொழிபெயர்ப்பாளர்கள் வேண்டாம்.

16.12.2015-ல் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு ஆகமப் பயிற்சி உள்ளவர்கள் கருவறையில் அர்ச்சனை செய்யலாம்; சாதி ஒரு தடையில்லை என்று தீர்ப்பளித்திருக்கிறது. சாதித் தடையையே தாண்டிய பிறகு மொழித்தடையா வந்து முன்நிற்கப் போகிறது?

கலசத்தில் தமிழ் ஒலிக்கட்டும். சிவன் தமிழ்கேட்டு நீராடட்டும். காற்று தமிழ்கேட்டுக் கைதட்டட்டும். இந்த உரிமைக்குப் போராடிய உணர்வாளர்களும், சமயச் சான்றோர்களும், அறிஞர்களும், புலவர்களும், மெய்யன்பர்களும் மெய் சிலிர்க்கட்டும். தமிழில்தான் குடமுழுக்கு என்ற ஆணையோ தீர்ப்போ பிறப்பிக்கப்பட்டுவிட்டால், பெருவுடையார் கோவில் சென்று நானும் தள்ளி நின்று தமிழ் கேட்பேன்; ஓரம் நின்று உயரம் பார்ப்பேன்.

கவிஞர் வைரமுத்து

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.